Sunday, 7 September 2014

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 ஸ்காலர்ஷிப்

பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மாதம் ரூ.500 கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தேசியத் திறனறித் தேர்வை எழுத வேண்டும்.


தற்போது, மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான மாநில அளவிலான தேசியத் திறனறித் தேர்வு (National Talent Search Examination) வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வு மூ-லம்  256 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தலா ரூ. 500 வீதம் மாதாந்திர கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களில் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும்.


2014-15 கல்வியாண்டில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். எட்டாம் வகுப்பில் தேசிய திறனறித் தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பில் இத்தேர்வை எழுத வேண்டியதில்லை. எனினும், எட்டாம் வகுப்பு படிக்கும் போது இந்தத் திறனறித் தேர்வை எழுதித் தகுதி பெறாத மாணவர்கள், தற்போது இத்தேர்வை எழுதலாம்.


இத்தேர்வு முறை எப்படி இருக்கும்?

மூன்று மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். மென்டல் எபிலிட்டி பகுதியில் 50 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 45 நிமிடங்கள் வழங்கப்படும். இதற்கு மதிப்பெண்கள் 50. லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் (ஆங்கிலம்) பகுதியில் 40 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு  விடையளிக்க 45 நிமிடங்கள் வழங்கப்படும். இந்தப் பகுதிக்கு மதிப்பெண்கள் 40. ஸ்கொலாஸ்டிக் ஆப்டிட்யூட் பகுதியில் தேர்வில் 90 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, இயற்பியலில் 12 கேள்விகளும் வேதியியலில்  11 கேள்விகளும் உயிரியலில் 12 கேள்விகளும் கணிதத்தில் 20 கேள்விகளும் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் பாடங்களில் தலா 10 கேள்விகளும் பொருளாதாரத்தில் 5 கேள்விகளும் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க  90 நிமிடங்கள் வழங்கப்படும். இந்தப் பகுதிக்கு மதிப்பெண்கள் 90. இத்தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மாணவர்கள் சரியான விடைகளைக் குறிப்பிட வேண்டியதிருக்கும்.


இத்தேர்வு எழுத விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வுக் கட்டணம் ரூ.50. மாநில அளவிலான இந்த தேசியத் திறனறித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அந்தந்தப் பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து தேவையான விண்ணப்பங்களை இம்மாதம் 28-ஆம் தேதி வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இத்தேர்வு எழுத விரும்பும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும். பெற்றோர்கள் உதவியுடன் மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட வேண்டியது அவசியம். மாணவர்களிடமிருந்து இம்மாதம் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களின் விண்ணப்ப விவரங்களை ஆன்லைன் மூலம் செப்டம்பர் 3-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர் சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்தும் அனுப்பலாம் அல்லது வெப்கேமரா மூலம் படம் எடுத்தும் அனுப்பலாம். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம், விண்ணப்பங்கள் ஆகியவற்றை மாவட்டக் கல்வி அதிகாரியிடம் செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை 5.30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசு வழங்கும் இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

0 comments:

Post a Comment