Tuesday, 30 September 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1 குறைகிறது


புதுடெல்லி,
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால் டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தாமல் இறக்குமதி விலைக்கு சமமாக வரும்வரை மாதம் லிட்டருக்கு 50 காசுகள் மட்டும் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.
15 நாட்களுக்கு ஒரு முறை, 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் இதுபோல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
வித்தியாசம் நீங்கியது இதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி டீசல் விலையை 50 காசுகள் உயர்த்தியவுடன், சர்வதேச சந்தை விலைக்கும், இங்குள்ள சில்லரை விலைக்கும் இடையே இருந்த வித்தியாசம் நீங்கியது. செப்டம்பர் 16–ந் தேதி சர்வதேச விலையைவிட இந்தியாவில் டீசல் லிட்டருக்கு 35 காசுகள் அதிகமாக இருந்தது. இந்த கூடுதல் விலை இப்போது ஒரு ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கூட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. சர்வதேச சந்தை விலைக்கே பெட்ரோல், டீசலை விற்கும் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் கைமாறுவதை தடுக்க இந்த விலை குறைப்பை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின்னர் எனவே இதுகுறித்து எண்ணெய் அமைச்சகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் தேர்தல் கமிஷனுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்து அதன் கருத்தும் கேட்கப்பட்டது.
இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியாக 2009–ம் ஆண்டு ஜனவரி 29–ந் தேதி டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.30.86 என்ற விலைக்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச விலைக்கு ஏற்பவும், 2013–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மாதம் 50 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டும் வந்தது.
பெட்ரோல் 68 காசுகள் குறைந்தது பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.87 ஆனது. டெல்லியில் 65 காசுகளும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் 68 காசுகளும் குறைந்தது.
டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாலை இந்தியா திரும்புகிறார். பிரதமர் மோடி இந்தியா வந்தபின்னர் டீசல் விலை குறைப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013 ஜனவரியில் இருந்து இதுவரை 19 தவணைகளில் டீசல் விலை (வரிகள் உள்பட) ஒட்டுமொத்தமாக ரூ.11.81 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment