![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8MWocYSeVgwSJe5a_l3nWvFY1P94g13nfnGGa5pTr0Gr-r5IS1Fmxwh190KKj4dk_r26bsUxR14YPj2kzGtuKnIN2GM-jCppc6HTUyNUVR0_S9rRoXyzydOibJjmDuaQEYcyhp9RGL0La/s1600/Dr.-Sarvepalli-Radhakrishnan-Celebrating-Teachers-Day-in-India.jpg)
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், பேராசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு
‘வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: செப்டம்பர் 5, 1888
பிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: ஏப்ரல் 17, 1975
தொழில்: அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.
இல்லற வாழ்க்கை
ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.
ஆசிரியராக அவருடைய பணி
முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.
1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள். 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்தப் படைப்பாகும்.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.
மேலும் அவருடைய பணிகள்
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
அரசியல் வாழ்க்கை
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது. 1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார்.
இறப்பு
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
0 comments:
Post a Comment