சென்னை, செப்.9-வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் கவுன்சிலிங்சென்னை ஐகோர்ட்டில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜி.விஜயகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-மருத்துவ கல்வியில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் விளக்க குறிப்பு (பிராஸ்பெக்டஸ்) வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த கல்விக்கான தகுதியுள்ள மாணவர்கள், வெளிப்படையாக கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் போன்ற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.விளக்க குறிப்பில் சந்தேகம்இந்த நிலையில், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்த 2014-15-ம் ஆண்டுக்கான விளக்க குறிப்பை, தமிழ்நாடு தனியார் தொழிற்கல்வி கல்லூரிகள் சங்கம் மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர் சேர்க்கையை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் குழுவின் சிறப்பு அதிகாரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.ஆனால் அதில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. எனவே அதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றனர் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை.தடை விதிக்க வேண்டும்கட்டண விவரங்களை வெளியிடாததால், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள், மாணவர்களிடம் இருந்து தனிக்கட்டணம் வசூலிக்க வழி ஏற்படுகிறது. அங்கு மாணவர் சேர்க்கைக்கு திறந்த நிலை கவுன்சிலிங்கும் நடத்தப்படுவதில்லை. எனவே வெளிப்படைத்தன்மை இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.எனவே 2014-15-ம் ஆண்டுக்கான விளக்க குறிப்பின் அடிப்படையில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதிக்க வேண்டும்.புதிய விளக்க குறிப்புதகுதி, வெளிப்படைத்தன்மை, நேர்மையுடன் மாணவர் சேர்க்கையை சுயநிதி கல்லூரிகள் நடத்தும் வகையில் புதிய விளக்க குறிப்பை உருவாக்குவதற்கு, மருத்துவ கல்வி இயக்குனரகம், இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நோட்டீசுஇந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனு மீதான விசாரணையை 17-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று பிரதிவாதிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.






0 comments:
Post a Comment