சென்னை, செப்.6-ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் தினமான நேற்று சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது
செய்யப்பட்டனர்.‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறைதமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரியும், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் பள்ளி கல்வி இயக்ககம்(டி.பி.ஐ.) அலுவலகத்தில் தங்களுடைய பள்ளி, கல்லூரி, ஆசிரியர் பயிற்சி படிப்பு அசல் (ஒரிஜினல்) சான்றிதழ்களை ஒப்படைக்கப் போவதாக ஆசிரியர்கள் அறிவித்திருந்தனர்.தேர்தல் அலுவலகம் முற்றுகைஆனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் ஆசிரியர் தினமான நேற்று திடீரென்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பு குவிந்தனர். அங்கு அவர்கள், ‘தங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்று கூறி தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முயன்றனர். அப்போது அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், ஆசிரியர்களிடம் உங்களுடைய வாக்காளர் அட்டையை சென்னை தலைமை செயலகத்தில் இயங்கி வரும் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் ஒப்படையுங்கள். இங்கு ஒப்படைக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.ஆர்ப்பாட்டம்இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரும் சென்னை தலைமை செயலகம் செல்ல தயாராகினர். இதற்கிடையில் ஆசிரியர்கள் போராட்டம் பற்றி தகவலறிந்து சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் மோகன்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தலைமை செயலகம் செல்ல தயாராக இருந்த ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கோயம்பேடு ஜெய் பூங்கா அருகில் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைபோலீசார் ஆசிரியர்களை கலைந்து செல்லுமாறு சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆசிரியர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறி ‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தங்களை தலைமை செயலகம் செல்ல அனுமதியுங்கள் என்று போலீசாரிடம் கோரிக்கையையும் வைத்தனர். ஆனால் போலீசார் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த ஆசிரியைகள் சசிகலா, எழில்மதி, ஆசிரியர் செந்தில் ஆகியோர் மயக்கமடைந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியல்-கைதுமதியம் 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புவேலிகளை கடந்து கோயம்பேடு 100 அடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். ஒரு சிலரை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேதனை தாங்காமல் ஒரு சில ஆசிரியைகள் கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இன்றும்(சனிக்கிழமை) தங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment