Saturday, 4 October 2014

வங்கி கணக்கு மூலம் மாணவர்களுக்கு உதவி தொகை

திருவள்ளூர்:'ஆதிதிராவிட இன மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற, வங்கி கணக்கு துவக்க வேண்டும்' என, ஆட்சியர் கூறினார்.திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையினை, இணையம் (ஆன் - லைன்) மூலம் பதிவு செய்து பெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை வகித்து பேசுகையில், ''ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியரின் நலன் காப்பதற்காக, கல்வி உதவித் தொகைகளை உடனடியாக பெற்று வழங்க வேண்டும் என்ற நோக்கில், இணையம் வாயிலாக பதிவு செய்து உடனடியாக பெற்று வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

மேலும், ''இதற்கு, மாணவ, மாணவியர் கட்டாயம் மைய வங்கிகளில், சேமிப்பு கணக்கு துவங்கி இருக்க வேண்டும். தங்களது வங்கி கணக்கு எண், வங்கியின் குறியீட்டு எண் போன்ற விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் போது குறிப்பிட வேண்டும்,'' என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் கருணாநிதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திர சேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுவாமிநாதன், மலர்விழி மற்றும் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment