Saturday, 9 August 2014

திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணி கோரிய மனு டிஸ்மிஸ்.


திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர்பணியை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கனிமொழி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

முதுகலை பட்டதாரி உடல்கல்வி இயக்குநர் பதவிக்கான தேர்வை ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த தேர்வில் நான் கலந்துகொண்டேன். எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ஆனால், தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறையில் கேட்டதற்கு, திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு அதன் பிறகு பிபிஎட் படித்துள்ளதாக தெரிவித்து எனது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். எனவே, எனக்கு பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் கனிமொழியின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியமும், கல்வித் துறையும் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: அரசுப் பணியில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 என ரெகுலர் பாடத்திட்டத்தில் படித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2009ல் அரசாணை வெளியிட்டுள்ளது. மனுதாரர் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். எனவே, அவரின் கோரிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது சரிதான். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment