Tuesday, 5 August 2014

மருத்துவ மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் மருத்துவ கல்லூரி டீனுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, ஆக.6-முதுகலை மருத்துவ பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் அனைவருக்கும், அவர்களது கல்வி சான்றிதழ்களை 15 நாட்களுக்குள் வழங்கவேண்டும் என்று அரசு மருத்துவ கல்லூரி டீனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உறுதிமொழி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுகலை மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேரும்போது, அவர்களிடம் ஒரு உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. அதாவது, முதுகலை பட்டப்படிப்பு முடித்த பின்னர், 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றவேண்டும். அதுவரை அவர்களது கல்வி சான்றிதழ்கள் வழங்கப்படாது என்று எழுதி வாங்கப்படுகிறது.இந்த நிலையில், சென்னை கொளத்தூரை சேர்ந்த டாக்டர் கே.ரூபா உட்பட 50-க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ படிப்பினை முடித்தவர்கள் ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.அந்த வழக்கு மனுக்களில் அவர்கள் கூறியிருப்பதாவது:-சட்டவிரோதம் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர்களின் கல்விச் சான்றிதழ்களை அவர்களுக்கு கொடுக்காமல், மருத்துவ கல்வி இயக்குனரின் உத்தரவின்படி மருத்துவ கல்லூரிகளின் டீன்கள் நிறுத்திவைத்திருப்பது சட்டவிரோதம் என்று கடந்த 2008-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும், படிப்பில் சேரும்போது விளக்க குறிப்பேட்டில் குறிப்பிடாமல், படிப்பு முடிந்த பின்னர் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக, முதுகலை மருத்துவம் படித்த மாணவர்கள் பணியாற்றவேண்டும் என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்குவதும் தவறு என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சான்றிதழ் வழங்கப்படும் ஆனால், முதுகலை பட்டப்படிப்பை அகில இந்திய ஒதுக் கீட்டின் கீழ் நாங்கள் படித்துள்ளோம். எனவே, 10-ம் வகுப்பு முதல் எம்.பி.பி.எஸ். வரையிலான கல்வி சான்றிதழ், நடத்தை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் வழங்கும்படி சென்னை மருத்துவ கல்லூரி டீனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் பி.சஞ்சய்காந்தி ஆஜராகி, ‘அகில இந்திய ஒதுக் கீட்டின் கீழும், பணி சேவை அல்லாத பிரிவின் கீழும் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு முடித்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது கல்விசான்றிதழை வழங்கும்படி, மருத்துவ கல்வி இயக்குனருக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்’ என்று வாதிட்டார். 15 நாட்கள் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘சான்றிதழ் கேட்டு வழக்கு தொடர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், வழக்கு தொடராத முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும், அவர்களுடைய கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் வழங்கப்படும் என்றும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும் என்றும் அரசு வக்கீல் கூறியுள்ளார்.எனவே, இந்த உத்தரவு நகல் கிடைத்த நாளில் இருந்து 15 நாட்களுக்கும் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சென்னை மருத்துவ கல்லூரி டீன் வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment