Thursday, 9 October 2014

பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், கலெக்டரிடம் முன் அனுமதி பெற்று சுற்றுலாவுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை


சென்னை,
மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது ஆசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், குறிப்பாக முன் அனுமதியை கலெக்டரிடம் பெறவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை இந்தியாவில் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது சீனியர் ஆசிரியர்கள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். சில நேரங்களில் சீனியர் அல்லது ஜூனியர் ஆசிரியர்கள் அழைத்துச் செல்லும்போது ஆற்றில் அல்லது கடலில் குளிக்கும்போது மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்து போகிறார்கள். சில நேரங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகனிடம் உத்தரவிட்டார். அதன்படி அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
மாணவர்கள் சுற்றுலா–பாதுகாப்பு பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் கல்வி சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு சுற்றுலா செல்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலா அழைத்து செல்வது என்பது மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ளதாகவும், வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் சார்ந்ததாகவும் அமையுமாறு தலைமையாசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுலா செல்லும் மாணவ–மாணவிகளின் விபரங்கள், அவர்களின் பெற்றோர் செல்போன் எண், இணையதள முகவரி அடங்கிய தகவலை முன்கூட்டியே பெறவேண்டும்.
அடையாள அட்டை மேலும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு அடையாள அட்டையை அணிந்திருக்க செய்ய வேண்டும். மேலும் முதுநிலை ஆசிரியரும், மாணவிகளுக்கு முதுநிலை ஆசிரியையும் பாதுகாப்பிற்கு உடன் செல்ல வேண்டும்.
பொது இடங்கள், அணைக்கட்டுகள், மின் நிலையங்கள், கடற்கரைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் முன்பு மாவட்ட கலெக்டர் அல்லது அந்த இடத்திற்கு பொறுப்பு அதிகாரியிடம் முன்கூட்டியே கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும். காரணம் அந்த மாவட்டத்தின் சூழ்நிலை அந்த மாவட்ட கலெக்டருக்கு கண்டிப்பாக தெரியும். சுற்றுலா செல்லும் முன்பு அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்வேன் எனவும், இதனை உறுதிச் செய்யும் வகையில் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் மாணவர்களால் அனுமதிக் கடிதம் வாங்கி தரப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைத்து விதிமுறைகளையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment