Sunday, 12 October 2014

ஹுத்ஹுத் புயல் சீற்றம்: ஆந்திரா, ஒடிசாவில் 5 பேர் பலி

ஹுத்ஹுத் புயல் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தபோது மனிக்கு 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது| படம்: சி.வி.சுப்ரமணியம்.
ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புய மிகமிக தீவிரப் புயலாக உருவெடுத்தது.
ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆந்திராவில் மூன்று பேர் பலி:
ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயலினால் ஏற்பட்டுள்ள முதல் பலி இவை.
ஸ்ரீகாகுளத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர். விகாப்பட்டினத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் இறந்தார்.
புயல் கரையை கடந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகியது. ஸ்ரீகாகுளத்தில் 68.2 மி.மீ அளவும், இச்சாபுரத்தில் 139 மி.மீ அளவும் மழை பெய்துள்ளது.
ஒடிசாவில் 2 பேர் பலி:
ஹுத்ஹுத் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 2 பேர் பலியாகினர்.
ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில், மீனவர் ஒருவர் தனது படகை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்த முயன்ற போது கடல் கொந்தளிப்பில் சிக்கி பலியானார். இத்தகவலை புரி மீட்புப் பணிகள் ஆணையர் பி.கே.மொஹபத்ரா தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் எச்சரிக்கையும் மீறி அந்த மீனவர் சென்றதாலேயே பலியானதாக தெரிகிறது. இதுவரை மீனவரின் அடையாளம் காணப்படவில்லை.
கேந்தரப்பா மாவட்டத்தில் மக்களை வெளியேற்றும் மீட்புப் படகு கழிழ்ந்ததில் 9 வயது சிறுமி ஒருவர் பலியானார். இதேபோல் அதே மாவட்டத்தில் 9 வயது சிறுவன் ஒருவரைக் காணவில்லை.
உதவி எண்கள் அறிவிப்பு:
ஆந்திரப் பிரதேசம்- 9849904019, 0853 - 2234870,2234301; சம்பல்பூர்- 0663-2533037, 8455886999, விசாகப்பட்டினம்- 0891-2842415
ஸ்ரீகாகுளம் 08942—225361 9652838191, toll free 1800—425—6625
விஜியநகரம் 08922—278770/236947
விசாக்ப்பட்டினம் 0891—2563121, toll free 1800—425—00002
கிழக்கு கோதாவரி 0884—2365424/2365506, toll free 1800—4253077/4251077
மேற்கு கோதாவரி 08812—230050/230934/252655, toll free 1800—4258848
மின், தொலைதொடர்பு சேவை பாதிப்பு
விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 170 முதல் 180 கி,மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புயல் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் லட்சுமண் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
முதல்வர் நேரில் ஆய்வு
ஹுத்ஹுத் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து இன்று மாலை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். வானிலையை பொறுத்து விசாகப்பட்டினம் செல்வதா இல்லை ராஜமுந்திரி செல்வதா என்பது முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அங்கு 2 முதல் மூன்று நாட்கள் முகாமிட்டுத் தங்கி மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார்.
ரூ.2000 கோடி நிவாரணம்:
ஹுத்ஹுத் புயலால் ஆந்திர மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி தொலைபேசியில் சந்திர பாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில், ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். புயல் சேதம் முழுமையாக இன்னு மதிப்பிடப்படாத நிலையில் அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி ஆகிய 7 மாவட்டங்களில் ‘ஹுத்ஹுத்’ புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் இம்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 5.14 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளையும் ஆந்திர அரசு செய்துள்ளது. இதற்காக 370 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 170 முதல் 180 கி.மீ வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் உடைவதுடன் மின் கம்பிகளும் அறுந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் மின்வாரிய துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சாலைகள், தண்டவாளங்கள் பழுதாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சாபுரம்-காக்கிநாடா இடையே நேற்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். கடலோர ஆந்திராவில் புயல் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தென்மத்திய ரயில்வே துறை 68 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் 31 ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இதன் பொது மேலாளர் ஸ்ரீவாத்ஸவா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னவரம், கலிங்கப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டது. காக்கிநாடா, மசூலிப்பட்டினம் துறைமுகங்களில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என கருதப்படும் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு கோதாவரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளை கவனிப்பதற்காக, கடற்படை சார்பில் 8 ஹெலிகாப்டர்கள், 60 ஆழ்கடல் நீச்சல் வீரர்களைக் கொண்ட 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். ராணுவம், பேரிடர் மீட்பு படை, கடற்படை என பல்வேறு குழுக்கள் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 விமானங்கள், 162 படகுகள், ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புயல் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோன்று ஒடிஸாவில் உள்ள கோராபுட், ராயகடா, மல்காசாகிரி, நவரங்பூர், கந்தமால், கஜுபதி கலஹந்தி, கன்ஜாம் ஆகிய மாவட்டங்களிலும் அதிக பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment