Friday, 7 November 2014

கல்வி நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய தனிக் குழு: ஹேமந்த் குமார் சின்ஹா

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநில உயர் கல்வித் துறைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் "அனைவருக்குமான தரமான உயர்கல்வி' என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவில் ஹேமந்த் குமார் சின்ஹா பேசியதாவது:
இந்தியா 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகிலேயே அதிக இளைஞர் சக்தியைக் கொண்ட நாடாகவும் உள்ளது. 2055 -இல் 14 முதல் 35 வயதுடையவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட ஒரே நாடாகவும் இந்தியா விளங்கவுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பட்டப் படிப்புகளை முடித்து வெளிவருபவர்களின் எண்ணிக்கையில் வருகிற 2020-இல் இந்தியா, சீனாவை மிஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் இப்போது உலக அளவில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளில் சீனாவை மிஞ்சும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுபோல விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி, வேளாண் ஆராய்ச்சி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் அபார வளர்ச்சி கண்டு வரும் இந்தியா கல்வியில் மட்டும் பின்தங்கியுள்ளது.
நாட்டில் 751 பல்கலைக்கழகங்கள் இருந்தபோதும், அவற்றில் ஒன்றுகூட உலக அளவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.
அறிவுசார் சொத்து உரிமை (ஐபிஆர்) பதிவைப் பொருத்தவரை, 88 சதவீதம் அமெரிக்காவால் செய்யப்படுகிறது.
அடுத்ததாக 6 முதல் 7 சதவீதம் ஐரோப்பிய நாடுகளாலும்,3 சதவீதம் சீனாவாலும் செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள 2 சதவீதம் மட்டுமே மீதமுள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளால் செய்யப்படுகின்றன.
இந்த நிலையை மாற்றும் வகையில் இந்திய அரசும், தமிழக அரசும் தீவிர முயற்சிகளை இப்போது மேற்கொண்டு வருகின்றன.
தரமான, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் கல்வியை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து அவ்வப்போது பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் கோவையில் பயிற்சி மையம் ஒன்றை தமிழக அரசு இப்போது அமைத்து வருகிறது. இங்கு பேராசிரியர்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதோடு, ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவனர்கள் மூலமும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அடுத்ததாக, மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், பிற துறைகளில் உள்ள டிஜிட்டல் நூலகங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கும் சிறந்த நூல்களை உலகம் முழுவதும் உள்ளவர்களும் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்க வழி செய்யப்படும்.
மேலும், மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இதுவரை 500-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. இருந்தபோதும், கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பின்தங்கி இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
எனவே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அதனால் என்ன மேம்பாடு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும் தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடக்க விழாவில் துபையில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலிஃப்டன் சேட்விக், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்த் ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment