மத்திய மந்திரிசபையில் இன்று 15 புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்.
மந்திரிசபை மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதன்முதலாக விஸ்தரித்து, மாற்றி அமைக்கிறார்.
மூத்த மந்திரிகள் அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்கள். அவர்களது பணிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய மந்திரிகள் நியமிக்கப்படுகிறார்கள். மந்திரிகளில் சிலரது இலாகாக்களையும் பிரதமர் மாற்றி அமைக்கலாம், நன்றாக செயல்படுகிற ராஜாங்க மந்திரிகள் ஒரு சிலருக்கு பதவி உயர்வு அளிக்கவும் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மந்திரி ஆகும் மூத்த தலைவர்கள் பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்று 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ துறைக்கு முழு நேர மந்திரி நியமிக்கப்படுகிறார். அந்தப் பதவிக்கு கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் பெயர் பலமாக அடிபடுகிறது.
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களான முக்தர் அப்பாஸ் நக்வி (உ.பி.), ராஜீவ் பிரதாப் ரூடி(பீகார்), ஜே.பி. நட்டா (இமாச்சல்), பண்டாரு தத்தாத்ரேயா (தெலுங்கானா), யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா (ஜார்கண்ட்), ராம் கிருபால் யாதவ் (பீகார்), ஹன்ஸ்ராஜ் ஆஹிர் (மராட்டியம்) மற்றும் அந்தக்கட்சியின் எம்.பி.க்கள் சவர்மால் ஜாட் (ராஜஸ்தான்), விஜய் சம்பலா (பஞ்சாப்), நிரஞ்சன் ஜோதி (உ.பி.), கிரிராஜ் சிங் (பீகார்), அஜய் டம்டா (உத்தரகாண்ட்), கர்னல் சோனாராம் சவுத்ரி, கஜேந்திர சிங் ஷெகாவத் (ராஜஸ்தான்), ரமேஷ் பைஸ் (சத்தீஷ்கார்) ஆகியோருக்கும் மந்திரி பதவி கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதவி உயர்வு? ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் ரத்தோர், பாடகர் பாபுல் சுப்ரியோ ஆகியோரின் பெயர்களும்கூட மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.
ராஜாங்க மந்திரிகளாக உள்ள நிர்மலா சீதாராமன், பிரகாஷ், ஜவடேகர் ஆகிய இருவரும் கேபினட் மந்திரிகள் ஆக்கப்படலாம் என தெரிகிறது. ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் துறை மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
சிவசேனா, தெலுங்குதேசம் கூட்டணி கட்சிகளைப் பொருத்தமட்டில் சிவசேனாவை சேர்ந்த அனில் தேசாய், தெலுங்குதேசத்தின் ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் மந்திரிகள் ஆகிறார்கள்.
அனேகமாக 15 புதிய மந்திரிகள் இன்று பதவி ஏற்கக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
பதவி ஏற்பு விழா புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இன்று மதியம் 1 மணிக்கு நடக்கிறது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
பதவி ஏற்கவுள்ள புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி இன்று காலை தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.






0 comments:
Post a Comment