Monday, 17 November 2014

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: விசாரணை குழு தலைவர் பதவி ஏற்பு

சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு, இழப்பீடு வழங்க நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன், நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த, 2004ல் கும்பகோணம், ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கோர தீவிபத்து சம்பவம் நடந்தது. இதில், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள், தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு, நிவாரணத் தொகை வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பது குறித்து விசாரணை செய்து, ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணைக் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். அவருக்கு, சென்னை கல்வி துறை அலுவலக வளாகத்தில், அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில், அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்டார். இதுகுறித்து, விசாரணைக் குழு வட்டாரம் கூறியதாவது:தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர், தங்கள் கருத்துகளையும், நிவாரணம் கோருவது தொடர்பான கோரிக்கைகளையும், குழுவிடம் அளிக்கலாம். கும்பகோணத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்ட பெற்றோரை, வெங்கட்ராமன் நேரில் சந்தித்து பேசுவார். அப்போது, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் விரிவாக ஏதாவது தேவை என்றால், அதுகுறித்து, குழுவினரிடம் பெற்றோர் முறையிடலாம். பெற்றோரிடம் விசாரணை நடத்தி, எந்த அளவு நிவாரணம் வழங்குவது என்பது குறித்த அறிக்கை, ஆறு மாதத்திற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பெற்றோரிடம் கருத்து கேட்பது தொடர்பான அறிவிப்பு, ஓரிரு நாளில் நாளிதழ்களில் வெளியிடப்படும். இவ்வாறு, குழு வட்டாரம் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment