Sunday, 9 November 2014

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி–2 ஏவுகணை சோதனை வெற்றி 2 ஆயிரம் கி.மீ. வரை சென்று தாக்கும்


புவனேஸ்வர்
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த அக்னி–2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், அக்னி வரிசை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 700 கி.மீ. வரை தாக்கும் அக்னி–1, 3 ஆயிரம் கி.மீ. வரை தாக்கும் அக்னி–3, 4000 கி.மீ. வரை தாக்கும் அக்னி–4 மற்றும் 5 ஆயிரம் கி.மீ. வரை தாக்கும் அக்னி–5 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
மேலும் நடுத்தர வகையிலான (ஐ.ஆர்.பி.எம்.), அதாவது 2,000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கவல்ல அக்னி–2 ஏவுகணை தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே கடந்த 2004–ம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இது ராணுவத்தின் 555–வது ஏவுகணை பிரிவு மூலம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
வெற்றிகரமாக சோதனை 2 அடுக்குகளை கொண்ட இந்த அக்னி–2 ஏவுகணை, ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ. பிரிவால் தரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதன் சோதனை நேற்று காலை 9.40 மணியளவில் ஒடிசா கடற்கரையில் தர்மாவுக்கு அருகே உள்ள வீலர் தீவில் நடத்தப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த 4–வது நடமாடும் செலுத்து வாகனத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. அப்போது இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூரத்தை அதிகரிக்கலாம் அக்னி–2 ஏவுகணை, அணு ஆயுதம் உள்பட 1,000 கிலோ வரையிலான எடை கொண்ட வெடிப்பொருளை சுமந்து செல்லக்கூடியது. இந்த ஏவுகணை 2,000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கவல்லதாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், வெடிப்பொருள் எடையை பொறுத்து இதன் தாக்கும் தூரத்தை 3,000 கி.மீ. வரை அதிகரிக்கலாம். 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்ட அக்னி–2 ஏவுகணை அதிநவீன ரேடார்களால் இயக்கப்படுகிறது.
இது கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7–ந் தேதி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. எனினும் ராணுவத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குழுவினர், தங்களின் ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக, டி.ஆர்.டி.ஓ.வின் ஒத்துழைப்புடன் நேற்று இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment