Wednesday, 1 October 2014

அக்டோபர் 9 - துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

அக்டோபர் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

         அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளில் துாய்மையான பாரதம் துாய்மையான பள்ளி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, பள்ளிகளிலிருந்து துவங்கும் வகையில், மாணவர்களுக்கு சுற்றுப்புற துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்கவும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இத்திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

        அதில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்.

                நாள்தோறும், மாணவர்கள் வாயிலாக பள்ளியின் சுத்தம் தொடர்பான விபரங்களை காலை இறை வணக்க கூட்டத்தில் பேசுதல், வகுப்பறை, ஆய்வுக்கூடம், நுாலகம் உள்ளிட்டவைகளை தினமும் சுத்தம் செய்தல், இப்பணிகள் குறித்த அவசியத்தையும், வழிமுறைகளையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தல், குடிநீர் வசதி அமைந்துள்ள இடம், சமையலறை, பொருட்கள் வைப்பு அறைகளை அன்றாடம் துாய்மைப்படுத்துதல், பள்ளி கட்டடங்கள், வகுப்பறை மற்றும், சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.

                அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கங்களின் சார்பில் வழங்கப்பட்ட, பள்ளி பராமரிப்பு நிதியை பயன்படுத்தி, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் குறித்த கட்டுரை, ஓவியம், விவாதப்போட்டி போன்றவற்றை நடத்த வட்டார வள மையத்தினர் அறிவுறுத்த வேண்டும்.

                  மாணவர்களை குழுக்களாக பிரித்து, சுற்றுப்புற துாய்மையை உணர்த்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், பேரணிகளை நடத்துதல், சுகாதாரமின்மையால் ஏற்படும் நோய்கள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்திட்டம், அக்டோபர் 9ம் தேதி முதல் 2015ம் ஆண்டு அகஸ்ட் 15ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

                       வட்டார வள மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூட்டங்கள் அமைத்து அறிவுறுத்த வேண்டும். மேலும், துாய்மைப் பணி தொடர்பான நிகழ்ச்சிகள், போட்டிகள், செயல்பாடுகளை புகைப்படம் எடுத்து மாவட்ட கல்வித்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியின் துாய்மை குறித்து கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி, அப்புகைப்படங்களை மாநில திட்ட இயக்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment