Sunday, 13 July 2014

பணி நிரந்தரமாகும் காலத்தில் கணவர் இறந்தால் மனைவிக்கு பணி வழங்க வேண்டும்

பணி நிரந்தரமாகும் நேரத்தில், எதிர்பாராதவிதமாக கணவர் மரணமடைந்தால், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் அணையில் மின்சாரத் துறையில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கவிதா.



இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2008 ஜனவரியில் இவர் தற்காலிக பணியாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் 2009 ஜூன் மாதம் பணியிலிருந்து திரும்பும்போது சாலை விபத்தில் ராதாகிருஷ்ணன் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக்கோரி மேட்டூர் அணை கண்காணிப்பு பொறியாளரிடம் கவிதா மனு கொடுத்தார். ஆனால், தற்காலிக பணியாளருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என்று கூறி அவரது மனுவை மின்வாரியம் நிராகரித்தது.

இதை எதிர்த்து கவிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி ஆஜராகி, தற்காலிக பணியாளராக நியமனம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் 480 நாட்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். எனவே, அவரை நிரந்தர ஊழியராகவே கருத வேண்டும். அதனால் அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு உரிமை உள்ளது என்று வாதிட்டார். மின்வாரியத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், தற்காலிக பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நடைமுறையும், விதிமுறையும் இல்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரரின் கணவர் 2008 ஜனவரியில் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டார்.

அதிலிருந்து 2009 ஜூன் வரை கணக்குப் பார்த்தால் அவர் 480 நாட்களுக்கும் மேல் தற்காலிக பணியாளராக வேலை செய்துள்ளார். எனவே, அவர் நிரந்தரப் பணியாளராக ஆகியிருக்க வேண்டும். எனவே, அவரை நிரந்தரப் பணியாளராக கருதி அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். மேலும¢, இறந்துபோன ராதாகிருஷ்ணனுக்கு வரவேண்டிய பணப்பலன்களையும் அவரது மனைவிக்குத் தர வேண்டும். இந்த உத்தரவை 4 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment