Thursday, 17 July 2014

அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுநல வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை, ஜூலை.18-முறையான அங்கீகாரத்தை பெறாமல் செயல்படும் 760 மழலையர் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு


 அனுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வில்லிவாக்கத்தை சேர்ந்த வக்கீல் கே.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-மழலையர் பள்ளிகள்தமிழ்நாடு தனியார் பள்ளி அங்கீகாரம் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் கல்வி வாரியத்துடன் இணைப்பினை பெறுவதற்கு முன்பு அரசிடம் அங்கீகாரத்தினை பெற்று இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் எந்த ஒரு அங்கீகாரமும் பெறாமல் செயல்பட்டு வருகிறது.அதிலும், சென்னையில் 760 தனியார் மழலையர் பள்ளிகள் இவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது. இந்த பள்ளிகள், தமிழ்நாடு கல்வித்துறையில் அங்கீகாரம் பெற்றுள்ளதாக பிரசாரம் செய்து, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் கட்டணமாக வசூலித்து வருகிறது. சான்றிதழ் இந்த பள்ளிகளுக்கு சொந்த கட்டிடமோ, குத்தகை கட்டிடமோ இல்லை. இந்த பள்ளிகள் செயல்படும் கட்டிடத்துக்கு, உரிய அமைப்புகளிடம் உறுதி சான்றிதழ்களும் இல்லை. விளையாட்டு மைதானங்களும் கிடையாது. சென்னை போன்ற பெருநகரங்களில், 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் குறைந்தது 20 ஆயிரம் சதுர அடி நிலம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குத்தகைக்கு எடுத்தாலும், அது 30 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளை கடை பிடிக்காமல் செயல்படும் இந்த பள்ளிகளில், உரிய கல்வி தகுதிகளை கொண்ட ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சட்டவிரோதமான பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் தற்போது படித்து வருகின்றனர். நடவடிக்கை எனவே, சட்டவிரோதமாக செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.பி.செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், 760 தனியார் மழலையர் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments:

Post a Comment