Saturday, 1 November 2014

தொலைநிலைப் படிப்பு: அங்கீகாரத்தை உறுதி செய்ய மாணவர்களுக்கு யுஜிசி அறிவுரை

தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் உறுதி செய்துகொள்வது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

             சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் படிப்புகளில் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி முறையிலும் சேர்ந்து படிக்கலாம், அதற்கு யுஜிசி அனுமதி பெறப்பட்டிருப்பதாகத் தவறான விளம்பரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டிருப்பது யுஜிசி-க்குத் தெரியவந்துள்ளது.

இதுபோல, தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தற்போதைய அங்கீகார நிலையை http://www.ugc.ac.in/deb/ என்ற இணையதளத்தில் பார்த்து உறுதி செய்த கொண்ட பிறகே, சேரவேண்டும்.

அவ்வாறின்றி, யுஜிசி அனுமதி பெறாத கல்வி நிறுவனத்தில் தொலைநிலைப் படிப்பை மேற்கொண்டு பெறப்படும் பட்டம் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியற்றதாகக் கருதப்படும்.

அதோடு, கல்வி நிறுவனத்தின் கல்வி வழங்கக் கூடிய எல்லையையும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அதாவது, மாநில அனுமதியை மட்டும் பெற்று நடத்தும் கல்வி நிறுவனங்கள் அந்த மாநிலத்துக்குள் மட்டுமே கல்வி மையங்களை அமைத்து தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும். அந்த மாநிலத்தைத் தாண்டி, பிற மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ கல்வி மையங்களைத் தொடங்க இயலாது. யுஜிசி-யின் சிறப்பு அனுமதியைப் பெற்ற பிறகே இதுபோல எல்லையைத் தாண்டி படிப்புகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தரமற்ற கல்வி நிறுவனங்களைத் தடுப்பது அவசியம்: யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ்
உயர் கல்வி விரிவாக்கம் திட்டத்தை நிறைவேற்றும்போது தரமற்ற கல்வி நிறுவனங்கள் உருவாவதைத் தீவிரமாகக் கண்காணித்து தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கேட்டுக்கொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழக 157-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அறிவியலில் டாக்டர் (டி.எஸ்சி.) பட்டம் பெற்ற ஒருவருக்கும், டாக்டர் பட்டம் (பிஹெச்.டி) முடித்த 213 பேருக்கும், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் முதல் ரேங்க் பெற்ற 115 பேர் உள்பட மொத்தம் 400 பேருக்கு பட்டச் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் பங்கேற்காமல் மொத்தம் 60 ஆயிரத்து 228 பேர் பட்டம் பெற்றனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். தாண்டவன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹெச். தேவராஜ் பேசியது:

தேசிய ஆய்வு, அங்கீகார கவுன்சிலின் "ஏ' தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, அதன் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் யுஜிசி சார்பில் ரூ. 100 கோடி நிதி வழங்கப்பட்டது.

மேலும் இந்தியாவிலுள்ள ஆற்றல்சார் பல்கலைக்கழகங்களைத் (யுபிஇ) தேர்வு செய்து, அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள், கல்வித் திட்டங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நிதி வழங்கக் கூடிய புதிய திட்டத்தையும் யுஜிசி அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தலா ரூ. 100 கோடி நிதி இரண்டு தவணைகளாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் (யுஒஇ) திட்டத்தின் கீழ் விரைவில் ரூ. 150 கோடி நிதியும், பாரம்பரியப் பல்கலைக்கழகம் என்ற அடிப்படையில் ரூ. 10 கோடி நிதியும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம், உலக அளவில் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தப் பல்கலைக்கழகமும் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. உயர் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த உயர் கல்வி விரிவுபடுத்தும் திட்டத்தின் மூலம், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு உயர் கல்வியில் தமிழகம் 35 சதவீத ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்.) ஏற்கெனவே தாண்டிவிட்டது. இருந்தபோதும் இந்த உயர் கல்வி விரிவுபடுத்தும் திட்டத்தை நிறைவேற்றுகிறபோது, பல்வேறு நிலைகளில் தரமற்ற கல்வி நிறுவனங்களும் உருவாகி விடுகின்றன. எனவே, இதுபோன்ற தரமற்ற கல்வி நிறுவனங்கள் செயல்படுவதைத் தடுக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பி. பழனியப்பன், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment