Tuesday, 4 November 2014

ஐஐடி உயர்கல்விக்கான தகுதி பெற பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக பள்ளி மாணவர்களும் அதிகளவில் சேர்ந்து பயிலத் தேவையான தகுதியைப் பெற பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தி, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை பிளஸ் 2 வகுப்பின் இறுதியில் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பதவியுயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தச் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் தலைமையில் நாமக்கல் எஸ்பிஎம் உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர முடிவதில்லை. இதற்கு தமிழக பள்ளிக் கல்வியில் நிகழும் குறைபாடுகளே முக்கியக் காரணமாகும். அத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்கவும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியைப் பெறவும் அரசு பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை
பிளஸ் 2 வகுப்பின் இறுதியில் வழங்க வேண்டும்.
மேலும், மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி சேர்க்கையில் அதிகளவில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன்பெற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 60 சத இடஒதுக்கீடும், சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 40 சத இடஒதுக்கீடும் வழங்க நிகழாண்டிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.
தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நேரத்தை வீணாக்காமல் தடுக்கவும் கல்லூரிகளில் உள்ளதைப் போல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளிலும் மொழிப் பாடத்துக்கு ஒரே தாள் என மாற்றி, தற்போதுள்ள 8 தேர்வுகளை 6 தேர்வுகளாகச் சுருக்கிட வேண்டும். தமிழகத்திலுள்ள சுயநிதிப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் கலைப் பாடப் பிரிவு தொடங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற 15 ஆண்டுகால பணி அனுபவம் தேவை என்ற விதிமுறையைத் தளர்வு செய்து, முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் விகிதாசாரத்துடன், குறைந்தது ஒரு கல்வி மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் பணித் திறனை மேம்படுத்தவும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை ஏழை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கவும் அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக் கணினி வழங்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை இணையவழியிலேயே பதிவு செய்யவும், அந்தக் கோரிக்கையின் தற்போதைய நிலை குறித்து அறிய ஒப்புகைச் சீட்டு எண்ணை அளிக்கும் நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்த வேண்டும்.
அரசுக் கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தகுதி வாய்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு 50 சத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநிலப் பொதுச்செயலர் க.இளங்கோவன் செயல்பாடுகளையும், மாநிலப் பொருளாளர் ப.தமிழ்மணியன் ஆண்டறிக்கையும் வாசித்தனர். மாநில அமைப்புச் செயலர் சி.பிரபாகரன், மாநில பிரசார செயலர் தி.கார்த்திகேயன், மாநிலத் தலைமையிடச் செயலர் டி.சுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் வி.எஸ்.பிச்சைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment