Thursday, 16 October 2014

செவ்வாய் கிரகத்தை நெருங்கும் வால் நட்சத்திரம்: மங்கள்யான் விண்கலத்தை பாதுகாப்பான பகுதிக்கு இடம் மாற்றிய இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ) செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியுள்ளது.  அது தனது சுற்று வட்ட
பாதையில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.  வருகிற அக்டோபர் 19ந்தேதி வால் நட்சத்திரம் ஒன்று செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவதால் தாக்குதல் ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, மங்கள்யான் விண்கலமானது அதன் பாதையில் இருந்து இஸ்ரோவால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகமதாபாத்தில் உள்ள விண்வெளி மைய இயக்குநர் ஏ.எஸ். கிரண் குமார் கூறும்போது, வருகிற அக்டோபர் 19ந்தேதி செவ்வாய் கிரகத்தை வால் நட்சத்திரம் ஒன்று நெருங்கி வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  வால் நட்சத்திரத்தின் வால் பகுதியில் இருந்து பாதுகாப்பான தொலைவிற்கு மங்கள்யான் விண்கலத்தை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம்.  எனவே, அது செயற்கைக்கோளை பாதிக்காது என்று கூறியுள்ளார்.

வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வேகமாக வரும்போது விண்வெளி சிதைவுகளால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக, இஸ்ரோ, நாசா மற்றும் உலகிலுள்ள பிற விண்வெளி ஆய்வு அமைப்புகள், தாங்கள் செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பியுள்ள விண்கலங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, பல கோடிக்கணக்கான மைல்களை கடந்து வால் நட்சத்திரமானது வந்து கொண்டிருக்கிறது.  இது செவ்வாய் கிரகத்திற்கு 87 ஆயிரம் மைல்கள் தொலைவில் வருகிற அக்டோபர் 19ந்தேதி வரும்.  சூரிய குடும்பம் உருவானபோது மீதமான பொருட்களை கொண்டு உருவான ஊர்ட் எனப்படும் மேகத்தில் இருந்து வால் நட்சத்திரமானது வருகிறது என நாசா தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment