ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிடக்கோரி 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக பெரும் குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையிலும் பல வழக்குகள் தொடரப்பட்டு பிரச்சினை மேலும் இடியாப்ப சிக்கலாகி இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமல் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கல்வியின் தரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆசிரியர்கள் இல்லாமலேயே படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.
கடுமையான போராட்டங்கள், சட்டமன்றத்தில் வலியுறுத்தல், தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் தலையீடுகள் போன்ற காரணங்களால், ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தமிழக அரசு பட்டியல் இனத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பதாக உள்ளது. வெயிடேஜ் முறையை ரத்து செய்யக்கோரி போடப்பட்டு வழக்கில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பளிக்கும் நீதிமன்றம், மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசாணை செல்லாது என்று அரசின் முடிவில் தலையிடுகிறது.
இத்தகைய அணுகு முறைகள் ஆசிரியர்கள் பணி நியமனத்தை முடக்குவதோடு மாணவர்களின் கல்வியையும் பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே தமிழக முதல்– அமைச்சர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய வகையில் உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான தெளிவற்ற போக்கைக் கண்டித்தும், பட்டியல் இனத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் தளர்வு தொடர்ந்திட வலியுறுத்தியும், தற்போது நடைமுறையிலுள்ள வெயிடெஜ் முறையை கைவிடக்கோரியும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் வருகிற 8–ந்தேதி சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய மையங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment