Wednesday, 15 October 2014

செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் 2 இயற்கைக் கோள்களின் படத்தை அனுப்பியது மங்கள்யான்

படம்: இஸ்ரோ
செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்து 20 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரோவின் சாதனை விண்கலமான மங்கள்யான் 2 இயற்கைக் கோள்களின் படங்களை அனுப்பியுள்ளது. அதில், ஒரு படத்தை இஸ்ரோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த இயற்கைக்கோள்கள் 'ஃபூபஸ்' (Phobos) என்று அழைக்கப்படுகிறது. ஃபூபஸ் என்பது கிரேக்கக் கடவுளின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பயங்கரம்’ (Horror) என்பதை உருவப்படுத்தும் கடவுள் என்று அங்கு வழங்கப்பட்டு வந்தது.
இஸ்ரோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபூபஸ்களின் சிறிய படத்தைப் பகிர்ந்துள்ளனர். மேலும், “செவ்வாயைச் சுற்றும் நிலவுகளில் பெரிதான இந்த ஃபூபஸ் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செவ்வாய்க்கிரகத்தைச் சுற்றி வருகிறது” என்ற வாசகத்தையும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு சுமார் 66,275 கிமீ உயரத்திலிருந்து இந்தப் படங்களைப் பிடித்துள்ளது மங்கள்யான்.

ஃபூபஸ் மற்றும் டெய்மஸ் என்ற இந்த இரண்டு நிலவுகள் 1877ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டெய்மஸ் என்ற இயற்கைக் கோளைக் காட்டிலும் ஃபூபஸ் 7 மடங்கு பெரியது என்று கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகம் சுற்றும் வேகத்தை விடவும் அதிக வேகத்தில் ஃபூபஸ், செவ்வாயைச் சுற்றி வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு 3 முறை செவ்வாயைச் சுற்றி வருகிறது ஃபூபஸ்.

ஃபூபஸின் சுற்றளவு 27x22x18 கி.மீ. ஆகும். இந்தக் கோள் செவ்வாய் கிரகத்தை 100 ஆண்டுகளில் 1.8மீ என்ற விகிதத்தில் நெருங்கி வருகிறது. இந்த விகிதத்தில் 50 மில்லியன் ஆண்டுகளில் ஃபூபஸ் கோள் செவ்வாய் கிரகத்தின் மீது மோதும் அல்லது அதன் வெளிவட்டத்தை ஊடுருவிச்செல்லும் என்று நாசா கணித்துள்ளது.

0 comments:

Post a Comment