Wednesday, 2 July 2014

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு 7-ந் தேதி தொடங்குகிறது - DINATHANTHI

சென்னை, ஜூலை.3-தள்ளிவைக்கப்பட்ட என்ஜினீயரிங் கலந்தாய்வு 7-ந் தேதி தொடங்குகிறது என்றும், கலந்தாய்வு மற்றும் நேரம் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்காக 2 லட்சத்து 93 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 லட்சத்து 14 ஆயிரம் உள்ளன. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்த்து வருகிறது.இந்த கலந்தாய்வில் விளையாட்டு பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு. அவர்களுக்கு தனி கலந்தாய்வு நடத்தப்படும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த இரு கலந்தாய்வும் இந்த வருடம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி பாடம் படிக்காமல் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் கலந்தாய்வு பொது கலந்தாய்வு என்று அழைக்கப்படுகிறது. இந்த பொது கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. தள்ளிவைப்புஆனால் இந்தியா முழுவதும் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் கூடுதல் இடங்கள் கேட்டும், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கேட்டும் ஏ.ஐ.சி.டி.இ. என்ற இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் விண்ணப்பித்து இருந்தன. அந்த நிறுவனம் அனுமதி குறித்து முடிவு எடுக்கும் முன்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தினால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் தனியார் கல்லூரிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ஏ.ஐ.சி.டி.இ. நிறுவனம் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த 27-ந் தேதி தொடங்க இருந்த பொது கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கலந்தாய்வுக்கு வரக்கூடிய மாணவ-மாணவிகள் 10 ஆயிரத்து 900 பேருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவலை அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியது.இருப்பினும் முதல் நாள் கலந்தாய்வுக்கு, தகவல் தெரியாத 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விவரம் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர்.அதிகாரிகள் ஆய்வுஇந்த நிலையில் மாணவர்களுக்கு கலந்தாய்வை எவ்வளவு சீக்கிரம் தொடங்கு முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.இது குறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவரே நேரில் டெல்லிக்கு சென்று விவரம் அறிந்து வந்தார்.அதனால் ஏ.ஐ.சி.டி.இ. நிறுவனம் விரைவில் முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே விண்ணப்பித்த 11 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும் புதிதாக 4 கல்லூரிகள் தொடங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து 11 கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கலந்தாய்வுக்கு 5 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-7-ந் தேதி கலந்தாய்வுசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு 7-7-2014 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்படுகிறது. மாணவ- மாணவிகள் அனைவருக்கும் அவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தேதி மற்றும் நேரம், விவரம் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் மாணவ-மாணவிகளின் ரேங்க் அடிப்படையில் அவர்கள் கலந்தாய்வுக்கு எப்போது கலந்துகொள்ள வேண்டும் என்ற விவரமும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-தினமும் 9 முறை பொது கலந்தாய்வு 7-ந் தேதி தொடங்குகிறது. இதில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். முதல் நாளான 7-ந் தேதி மட்டும் குறைந்த நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மறு நாளில் இருந்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அனுப்பப்படுவார்கள். கலந்தாய்வு கடந்த வருடம் காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிவடையும். இந்த வருடம் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு தான் முடிவடையும். கடந்த வருடம் தினமும் 8 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் 9 முறை கலந்தாய்வை நடத்த உள்ளோம். இந்த வருடம் கலந்தாய்வு தள்ளிப்போன காரணத்தால் இப்படி கூடுதலாக தினமும் 1 மணி நேரம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மதியம் அலுவலர்களின் சாப்பாட்டுக்கு உரிய நேரத்தையும் ரத்து செய்துள்ளோம். மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராமல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.  

0 comments:

Post a Comment