சென்னை, ஜூலை.12-அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பிளஸ்-2 தேர்வில் 200-க்கு 190-க்குமேல் கட் ஆப் மதிப்பெண் எடுத்த 11 மாணவ-மாணவிகள் தமிழ்
வழியில் படிக்கக்கூடிய சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளை விரும்பி எடுத்துள்ளனர். என்ஜினீயரிங் கலந்தாய்வுதமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவ-மாணவிகளை பி.இ. சேர்த்து வருகிறது. விளையாட்டு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.கடந்த 7-ந் தேதி முதல் பொது கலந்தாய்வு நடந்து வருகிறது. அதுபோல தொழில்கல்வி மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டு வருகிறது. கலந்தாய்வில் அண்ணாபல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி உள்ளிட்ட பல அரசு முன்னணி கல்லூரிகளில் இடம் தீர்ந்து விட்டது. தமிழ் வழியில் சிவில், மெக்கானிக் பிரிவுகிண்டி என்ஜினீயரிங் கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் உள்ளன. ஆங்கில வழியில் உள்ள இடங்களை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துவிட்டனர். அதனால் அந்த இடம் காலியாகிவிட்டது. ஆனால் தமிழ் வழியில் உள்ள இடங்கள் உள்ளன. சிவில் என்ஜினீயரிங் தமிழ் வழி பிரிவில் 5 பேர்களும், மெக்கானிக்கல் பிரிவில் 6 பேர்களும் சேர்ந்துள்ளனர். சிவில் பிரிவை எடுத்த 5 பேர்களில் 4 பேர் மாணவிகள். ஒருவர் மட்டும் மாணவர். மெக்கானிக்கல் பிரிவை 6 பேர் எடுத்துள்ளனர். அவர்களில் 5 பேர் மாணவர்கள். ஒருவர் மாணவி. இவர்கள் 11 பேர்களில் சிலர் 190 கட்ஆப் மதிப்பெண்ணுக்கும் அதிகமாகவும், சிலர் 194 கட் ஆப் மார்க்கும் எடுத்தவர்கள். இவ்வளவு மதிப்பெண் பெற்றவர்கள் தமிழ் வழியை தேர்ந்து எடுத்ததற்கான காரணம் என்ன என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-அண்ணாபல்கலைக்கழகம் என்ற பெயருக்காக....அண்ணாபல்கலைக்கழகம் என்ற பெயருக்காக அவர்கள் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அல்லது கல்விக்கட்டணம் குறைவு என்பதால் சேர்ந்திருக்கலாம். தமிழ் வழியில் படித்தால் அரசு துறையில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு உண்டு என்பதால் தமிழ் வழியில் படிக்கலாம். பிளஸ்-2 வரை தமிழ் வழியில் படித்ததால் பி.இ. படிக்கும்போது ஆங்கில வழியில் படிக்க சிரமமாக இருக்கும் என்று கருதினார் களா? என்பது தெரியவில்லை. இவற்றில் ஏதாவது ஒரு காரணத்திற்காகத்தான் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் வழியில் படித்தாலும் அவர்கள் தமிழ் அல்லது ஆங்கில வழியில் தேர்வு எழுதலாம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.






0 comments:
Post a Comment