Tuesday, 16 December 2014

சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை, வங்கிக் கணக்கு போதும்: மத்திய அமைச்சர் விளக்கம்

சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை, வங்கிக் கணக்கு இருந்தால் போதுமானது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்து அவர் கூறியதாவது:

சமையல் எரிவாயு மானியத்தை நுகர்வோருக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தின் (டிபிடீஎல்) கீழ் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை. வங்கிக் கணக்கு எண்ணை வழங்கினாலே போதுமானது. இத்திட்டத்தில் சேரும் ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒரு சிலிண்டருக்கான மானியத்தொகை முன்கூட்டியே அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மானியத்தொகையை சேர்த்து கொடுத்து அவர்கள் சந்தை விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட மாவட்டத்தில் நேரடி மானியத் திட்டம் தொடங்கிய பிறகு, 3 மாதங்கள் வரை இத்திட்டத்தில் சேர நுகர்வோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதுவரை அவர்களுக்கு மானிய விலையிலேயே சிலிண்டர் வழங்கப்படும்.
3 மாதங்களுக்குப் பிறகு அடுத்த 3 மாதங்கள் வரை மானியத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டு, சந்தை விலையில் சிலிண்டர் வழங்கப்படும். இந்தக் காலத்தில் நேரடி மானியத் திட்டத்தில் நுகர்வோர் சேரும்போது, அவர்கள் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.
இரண்டாவது 3 மாதங்களுக்குள் நேரடி மானியத் திட்டத்தில் நுகர்வோர் சேரவில்லை என்றால், அவர்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட மானியத் தொகை காலாவதியாகி விடும். பிறகு நுகர்வோர் எப்போது இத்திட்டத்தில் சேருகிறாரோ அப்போது தொடங்கி மானியம் வழங்கப்படும். அதுவரை அவர்கள் சந்தை விலையில் தான் சிலிண்டர் பெறமுடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

0 comments:

Post a Comment