Sunday, 28 December 2014

துவங்கியது போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்ட டிசம்பர் 29ம் தேதிக்கு பதிலாக இன்றே (டிசம்பர் 28) போராட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தொ.மு.ச., தெரிவித்துள்ளது.

தொ.மு.ச., குற்றச்சாட்டு : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலருக்கு 2012ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியமும், ஓய்வு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து துறை ஊழியர்களின் நலனில் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை என தொ.மு.ச., குற்றம்சாட்டி உள்ளது. மேலும், 12வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 20 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.
பேச்சுவார்த்தை தோல்வி : தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தொ.மு.ச., கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, சென்னையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படாததால், ஏற்கனவே அறிவித்துள்ள டிசம்பர் 29ம் தேதிக்கு முன்னதாகவே வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து கழக ஊழியர்கள் துவக்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக, தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1.40 லட்சம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம் : ஸ்டிரைக் நடைபெறும் என தொ.மு.ச., திட்டவட்டமாக அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட மற்றும் கிளை போக்குவரத்து கழக பணிமனைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டிரைக்கை மீறி பஸ்கள் இயக்கப்பட்டதை கண்டித்து மணப்பாறையில் இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள், போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் பயணிகள் உரிய நேரத்திற்கு போக வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அரசு அறிவிப்பு : தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment