6 மாணவர்கள் நீக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22-ந் தேதி, முன்னாள் மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது தற்போது பிளஸ்-2 படித்து வரும் 6 மாணவர்கள், வகுப்பறையில் அமர்ந்து மது குடித்து விட்டு, ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மறுநாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகநாதன், குறிப்பிட்ட 6 மாணவர்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் மது குடித்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும், பள்ளியில் இருந்து நீக்கிய தலைமை ஆசிரியர், மாற்று சான்றிதழை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.
அதிகாரிகளிடம் முறையீடு
இவர்களில் ஒரு மாணவர் ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் சேர்ந்து விட்டதாகவும், மற்ற 5 மாணவர்கள் வேறு பள்ளியில் சேர சென்றபோது, அங்குள்ள தலைமை ஆசிரியர்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 3 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் முதன்மை கல்வி அலுவலரை சந்திக்க நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், ஆய்வு பணிக்காக கொல்லிமலை சென்று விட்டதால், அங்கிருந்த அலுவலர்களிடம் அவர்கள் முறையிட்டனர்.
மீண்டும் பள்ளியில் சேர்க்க..
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறியதாவது:-
அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் இந்த வேளையில், படிப்பில் கவனம் செலுத்தாமல், பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் ஒழுங்கீனமான முறையில் நடந்து உள்ளனர். இதனால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்து உள்ளார்.
இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள், அவர்தம் பெற்றோரை அழைத்து பேசி, உரிய அறிவுரைகள் வழங்கி, மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆவன செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment