Monday, 5 January 2015

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்ட நடவடிக்கை

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டிற்குள், அரசு பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்
து உள்ளது.பிரதமர் மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், சுகாதாரத்தை பேணும் வகையில், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில், அதிகளவு அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதால், மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, கழிப்பறை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் படி, அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியான, கழிப்பறை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டில், 474 பள்ளிகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. மேலும், 495 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை கட்ட, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, இடைநிலை கல்வித்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 495 உயர், மேல்நிலைப் பள்ளிகளில், 4.95 கோடி ரூபாய் செலவில், கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
'நபார்டு' உதவி:கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 656 மேல், உயர்நிலை பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியான, கழிப்பறை, 'நபார்டு' வங்கி உதவியுடன் கட்ட, அரசு ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி., பாரத மிகுமின் நிறுவனமான, 'பெல்' மற்றும் ஸ்டேட் வங்கி ஆகியவை, 1,000 பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட இசைவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வித்திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமும், கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும், என்றார்.

0 comments:

Post a Comment