Friday, 2 January 2015

போலியோ சொட்டு மருந்து முகாம் 18 ம் தேதி ! : 2,41,376 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 41 ஆயிரத்து 376 குழந்தைகளுக்கு வரும் 18ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

போலியோ நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் முதல் கட்டமாக வரும் 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி மாதம் 22ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில், 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 41 ஆயிரத்து 376 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையம், கோவில்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என 1,613 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மையத்திற்கு 4 பணியாளர்கள் வீதம் 1,613 மையங்களுக்கு 6,452 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் ஈடுபட உள்ளனர். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்குத் தேவையான போலியோ சொட்டு மருந்துகள் கடலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விரைவில் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நேற்று, நடந்தது. கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவகர், நலப்பணிகள் இணை இயக்குனர் வித்யா சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், முகாம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

0 comments:

Post a Comment