Monday, 5 January 2015

தமிழகம் முழுவதும் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியீடு: புதியவர்களுக்கு ஜன.25-ல் வண்ண அட்டை

கோப்புப் படம்
ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர்
சுருக்கமுறை சிறப்புத் திருத்த இறுதிப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.
புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வரும் 25-ம் தேதி வாக்காளர் தினத்தில், வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஈரோடு, சேலம் உட்பட பல மாவட்டங்களில் புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 38,34,388 வாக்காளர்களில் ஆண்கள் 19,11,714 பேர் , பெண்கள் 19,21,905 பேர், மூன்றாம் பாலினத்தவர் 769 பேர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியில் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 17,66,336 வாக்காளர்களில் ஆண்கள் 8,78,967 பேர் , பெண்கள் 8,87,296 பேர், மூன்றாம் பாலினத்தவர் 73 பேர் என ஈரோடு ஆட்சியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 27,29,548 புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களில் ஆண்கள் 13,76,720 பேர், பெண்கள் 13,52,603 பேர், மூன்றாம் பாலினத்தவர் 225 பேர் என சேலம் ஆட்சியர் மகர பூஷணம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 29,74, 512 புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 14,87,491 பேர், பெண்கள் 14,87,018 பேர். மூன்றாம் பாலினத்தவர் 53 பேர் என பட்டியல் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்படி, 2015 ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை சிறப்புத் திருத்தம் கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.
அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 48 லட்சத்து 70 ஆயிரத்து 296 வாக்காளர்கள். இதில் 2 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்கள், 3,125 இதர வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்குதல் தொடர்பாக, கடந்த அக்டோபர் 15 முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2 முறை சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டன. திருத்தத்துக்கான கடைசி நாள் வரை மொத்தம் 20 லட்சத்து 68 ஆயிரத்து 420 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 28 ஆயிரத்து 600. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பெயர் சேர்க்க 225 விண்ணப்பங்கள் வந்திருந்தன. பெயர் நீக்க 42 ஆயிரத்து 832 பேர், பெயர்களில் திருத்தம் கேட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 208 பேர், முகவரி மாற்றம் கோரி 1 லட்சத்து 10 ஆயிரத்து 555 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுமைக் கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டைவிட 14 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்" என்றார்.
சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டனர்.

0 comments:

Post a Comment