Friday, 16 January 2015

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைப்பு

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.2.42 மற்றும் 2.25 குறைக்கப்பட்டுள்ளது. | கோப்புப் படம்.
பெட்ரோல் விலை ரூ.2.42 மற்றும் டீசல் விலை ரூ.2.25 குறைக்கப்பட்டது. இது இன்னமும் கூட குறைந்திருக்கும், ஆனால் மத்திய அரசு இரண்டின் மீதான
உற்பத்தி வரியை லிட்டர்க்கு ரூ.2. அதிகரித்துள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இருப்பினும் உற்பத்தி வரி அதிகரிப்பினால் விலை குறைப்பு இருக்காது என்று செய்திகள் வெளிவந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது விலையைக் குறைத்துள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 46 டாலர்கள் குறைந்ததன் அனுகூலங்களை இந்த உற்பத்தி வரி அதிகரிப்பு இழக்கச் செய்துள்ளது.

நவம்பர் மாதத்திலிருந்து 4-வது முறையாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவு கண்டதன் அடிப்படையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.7.75, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.6.50 குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு குறைக்கப்படாது ஓரளவுக்கு அதன் அனுகூலங்களை மக்களுக்கு அளித்திருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள்.
கடந்த ஆகஸ்ட் முதல் பெட்ரோல் விலைகள் 9-வது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.58.91 ஆக இருக்கும். அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 48.26ஆக இருக்கும்.

மேலும், 4 முறை உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதினால், நடப்பு நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறையை 4.1%-ஆகக் குறைக்கும் இலக்கை எட்ட முடியும் என்று அரசு கருதுகிறது.

இன்றைய விலைக்குறைப்பின் மூலம் ஆகஸ்ட் முதல் மொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69 குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் விலையும் இதுவரை மொத்தத்தில் லிட்டருக்கு ரூ.10.71 குறைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment